2010/06/10

தொடக்கவிழாவில் பங்குகொள்வார் நெல்சன் மண்டேலா

நேற்று இரவில் நடைபெற்ற விபத்து ஒன்றில்
நெல்சன் மண்டேலா அவர்களின் கொள்ளுப்பேர்த்தி
செல்வி செனானி
மண்டேலா
இறந்து போனமை காரணமாக
தொடக்க விழா நிகழ்வுகளில் மண்டேலா பங்கு கொள்ளமாட்டார்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
11.06.2010
உலககிண்ணப்போட்டி 2010 நாளை ஆரம்பமாக உள்ளது. 204 நாடுகள் பங்கு கொண்ட தகுதி காண் போட்டிகளிலிருந்து தெரிவான31 நாடுகள். போட்டியை நடாத்தும் நாடு என்கிறவகையில் தகுதி காண்போட்டியின்றி தெரிவாகி விட்ட தென் ஆபிரிக்கா. இந்த மாபெரும் கால்பந்தாட்டச் சமரில் மொத்தம் 32 அணிகள்.

இப்போட்டியின் தொடக்கவிழாவில் தென் ஆபிரிக்காவின் மாபெருந்தலைவரும் விடுதலைவீரருமான நெல்சன் மண்டேலா அவர்கள் பங்கு கொள்கின்றார் என்பது சிறப்பம்சம். 91 வயது மண்டேலா அவர்கள் இந்த உலகக்கிண்ணப்போட்டி தென் ஆபிரிக்காவில் நடைபெற வைப்பதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டவர். "நெல்சன் மண்டேலாவுக்கே இந்தப்போட்டியினை அர்ப்பணிக்கிறேன்"எனக்கூறித் தென் ஆபிரிக்காவின் இன்றைய அதிபர் ஜாகோப் சூமா அவரைப் பெருமைப்படுத்தியுள்ளார். தமது முதுமை நிலை காரணமாக பொது வைபவங்களில் பங்கு கொள்வதனைத் தவிர்த்துவரும் முன்னாள் அதிபர் மண்டேலா தொடக்க விழாவிற்கு வருகை தருவதனைக் காண உலகம் காத்திருக்கின்றது. சில தினங்களின் முன் தென் ஆபிரிக்க அணிவீரர்களைச் சந்தித்து அவர்களுடன் அளவளாவி உற்சாக மூட்டினார் என்பதும் குறிப்பிடத் தகுந்தது.
முதற்போட்டி நடைபெறவுள்ள ஜோகன்ஸ்பேர்க்கின் SOCCER CITY விளையாட்டரங்கினுள் நெல்சன் மண்டேலா அவர்கள் சுற்றிவலம் வந்து மக்களையும் வீரர்களையும் உற்சாகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.